யாழ்ப்பாணம்,கொடிகாமம்-பாலாவி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்திக்கொண்டு வந்த உழவியந்திரம் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில்,அதில் பயணித்த மூன்று பேரும் தப்பித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொடிகாமம் பாலாவி காட்டுப் பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்ட இராணுவத்தினர், அவ்வழியே மணலுடன் வந்த உழவியந்திரத்தை மறித்துள்ளனர்.
அவ்வேளையில் வேகமாக வந்த உழவியந்திரம் இராணுவத்தினரை மோதித் தள்ள முற்பட்ட போது, உழவியந்திரத்தின் சக்கரங்களை குறிபார்த்து இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது உழவியந்திரத்தின் மூன்று சக்கரங்கள் சேதமடைந்து காற்றுப் போன நிலையில், அதில் பயணித்த மூவரும் உழவியந்திரத்தை கைவிட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பிரதேசத்துக்கு வந்த கொடிகாமம் காவல்துறையினர் உழவியந்திரத்தை மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு, கடத்தல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது