உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக குரல் எழுப்பி வரும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, யுத்தத்தால் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளுக்காகவும் குரலை உயர்த்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சபையில் தெரிவித்தார்.
பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துமாறு ஒருநாள்கூட கூறியிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் இளைஞர்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுமளவுக்கு நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக கைதுகள் தலை தூக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கைக்கு அமைய மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்காக நாமும் சபையில் அஞ்சலி செலுத்துகிறோம். தமிழர்கள் இந்த மண்ணில் கடந்த 70 ஆண்டுகளாக கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுள்ளனர்
இறுதி யுத்தத்தில், இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்காக தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர். கஞ்சிக்காகவும் சோற்றுக்காகவும் வரிசையில் நின்ற பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டனர். ஐ.நாவின் அங்கத்துவ நிறுவனங்கள் கலைக்கப்பட்டன.
இவ்வாறு பாரிய அநியாயங்கள் இடம்பெற்ற போது கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை. யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துமாறு ஒருநாள்கூட கூறியிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.