இந்தோனேசிய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் 53 மாலுமிகளுடன் காணாமல் போயிருப்பதாக, இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலி தீவுக்கு வடக்கே, 60 மைல் தொலைவில், இன்று அதிகாலை 3 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே, நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நீரில் மூழ்குவதற்கான அனுமதி கோரிய பின்னர், தொடர்புகள் துண்டிக்கப்பட்டன என்றும், இதையடுத்து, குறித்த பிரதேசத்தில் இன்று காலை 7 மணியளவில் கடலில் எண்ணெய் படிமம் காணப்பட்டதாகவும் இந்தோனேசிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட குறித்த நீர்மூழ்கி 500 மீற்றர் ஆழத்துக்குச் செல்லக் கூடியது என்றும், அது தற்போது 200 மீற்றர் ஆழத்தில் இருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து, அண்டை நாடுகளான அவுஸ்ரேலியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளிடம் உதவி கோரியுள்ள இந்தோனேசியா தனது கடற்படைக் கப்பல்கள் மூலம் தேடுதல்களை நடத்தி வருகிறது.
எண்ணெய்க் கசிவு கடல் பகுதியில் தென்படுவதால், நீர்மூழ்கியில் ஆபத்து நேரிட்டிருக்கலாம் என்றும் அதில் உள்ள 53 பேரினதும் உயிர்களுக்காக பிரார்த்திப்பதாகவும் இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது.