உக்ரேன் எல்லைக்கு அருகே குவித்திருந்த ஒரு பகுதி படைகளை மீண்டும் தளங்களுக்குத் திரும்புமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி சோய்கு (Sergei Shoigu) உத்தரவிட்டுள்ளார்.
கிரீமியா மற்றும் உக்ரேன் எல்லைக்கு அருகில் ரஷ்யா தனது படைகளைக் குவித்து வந்ததால், கடந்த பல வாரங்களாக பதற்ற நிலை அதிகரித்து வந்தது.
இந்தப் பகுதியில் சுமார் ஒரு இலட்சம் துருப்பினரை ரஷ்யா குவித்து வைத்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் மதிப்பீடு செய்திருந்தது.
இந்த நிலையில், ரஷ்யாவினால் பலவந்தமாக இணைக்கப்பட்ட கிரீமியாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர், பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த படைகள் தளங்களுக்குத் திரும்பிச் செல்லும் என்று கூறியுள்ளார். தமது உத்தரவை அடுத்து பல படைப்பிரிவுகள் நிரந்தர தளங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாகவும், இந்த நடவடிக்கை மே 1ஆம் நாள் நிறைவடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்