28 ஆண்டுகளாக இயங்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
“கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பணியகத்தினை கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் பணியகத்தின் உப பணியகமாக கருதுமாறு, உள்நாட்டு விவகார அமைச்சினால் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1993ம் ஆண்டு தனியான பிரதேச செயலாளர் பணியகமாக உருவாக்கப்பட்டிருந்த இப் பணியகம் தற்போது கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் பணியகத்தின் உப பணியகமாக தரமிறக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பணியகம் அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பணியகங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
அரசியற் காரணங்களினால் கடந்த 28 வருடங்களாக இப்பணியகத்தின் உருவாக்கம் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் மேற்கொள்ளப்படவில்லை.
அதனை காரணங்காட்டி தரமிறக்கும் நடவடிக்கையை நியாயப்படுத்த முனைகிறார்கள். இது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நடவடிக்கை.
இந்த பிரதேச செயலாளர் பணியகத்தின் ஆட்புல எல்லைக்குள் வாழ்பவர்கள் பெரும்பாலும் முழுமையாகவே தமிழர்கள் என்பதனால் இப்பாகுபாடு காட்டப்படுகிறதா? இதுதான் காரணமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.