ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக மியன்மார் இராணுவம் மேற்கொண்ட ஒடுக்குமுறையால் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் மியன்மார் ஆட்சியை அந்த நாட்டின் இராணுவம் கைப்பற்றிய நிலையில் அதற்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக மியன்மார் இராணுவம் மிக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மியன்மார் இராணுவத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளால் இதுவரை 738 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் 3ஆயிரத்து 300 பேர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இராணுவத்தின் கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் அண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.
மியன்மாரில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கு உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கோரியுள்ளார்