வட மாகாணத்தின் காவல்துறை நிலையங்களுக்கு தமிழ் மொழி தெரிந்த இளைஞர், யுவதிகளை, இணைத்துக்கொள்வதற்கு காவல்துறை தலைமையகம் முழுமையான சேவையினை வழங்கும் என காவல்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
காவல்துறை திணைக்களம், மற்றும் வடமாகாண காவல்துறை நிலையத்தின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் தொழில் வாய்ப்பற்ற தமிழ் இளைஞர்,யுவதிகளை காவல்துறை சேவைக்கான ஆளணியினை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் 10 ஆயிரம் இளைஞர்,யுவதிகள் காவல்துறை சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் 24 ஆயிரம் பேரை சேவையில் இணைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தில் காவல்துறை நிலையங்களில் கடமையாற்றும் சிங்கள காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பொதுமக்கள் முறைப்பாடுகள் எழுத்து மூலமாகவோ, வாய்மொழி மூலமாகவோ வருகின்றபோது மொழிப் பிரயோகங்களை தவற விடுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.