நிலாவரையில், தொல்லியல் திணைக்களத்தின் கருமங்களுக்குத் தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் மீது தொடரப்பட்ட வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றே, வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என, நீதிவான் அறிவுறுத்தியுள்ளார்.
தொல்லியல் திணைக்களம் நிலாவரையில் மேற்கொள்ள இருந்த நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்தினார் என்று அச்சுவேலி காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று மாலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது, தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானியில் நிலாவரைக் கிணறு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கிணற்றுக்கு அப்பால் தான் தொல்லியல் திணைக்களத்தின் முயற்சி இடம்பெற்றுள்ளது என்றும், சட்டத்தரணி திருக்குமரனால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
காவல்துறையினர் குற்றவியல் சட்டக் கோவை சரத்தின் பிரகாரம், சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றே குற்றப்பத்திரத்தினைத் தாக்கல் செய்திருக்க வேண்டும் எனவும், அவர் வாதிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்த இவ் வழக்கினை நடத்துவதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வழக்கினைத் தொடருமாறு காவல்துறையினருக்கு நீதிவான் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் தவிசாளர் நிரோஷை சொந்தப் பிணையில் செல்ல அனுமதி அளித்துள்ளார்.