இஸ்ரேலின் தெற்பகுதியில் அணுசக்தி மையத்துக்கு அண்மையில், சிரியா ஏவிய விமான எதிர்ப்பு ஏவுகணை ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.
இஸ்ரேலின் இரகசிய அணுசக்தி மையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில், டிமோனா பிரதேசத்தில், (Dimona) அபாயச் சங்கு ஊதப்பட்ட பின்னர், பாரிய சத்தத்துடன் இந்த ஏவுகணை வெடித்துச் சிதறியதாக தகவல்கள் கூறுகின்றன.
சிரியாவில் உள்ள வான் பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய விமானத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றே அது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வெடித்துச் சிதறிய விமான எதிர்ப்பு ஏவுகணை SA-5 என இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், இந்த ஏவுகணை எவ்வாறு இடைமறிக்கப்படாமல் தப்பியது என்பது குறித்தும் பூர்வாங்க விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, டமாஸ்கசை சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேலிய ஏவுகணைகள் இலக்கு வைத்து தாக்கியதாக சிரிய இராணுவம் கூறியுள்ளது.
பெரும்பாலான ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், நான்கு இராணுவத்தினர் காயமடைந்தனர் என்றும் சிரிய இராணுவம் அறிவித்துள்ளது.