கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மற்றும், இடையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் 19 மனுக்களும், இந்த மனுக்களுக்கு ஆதரவாக 2 இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அதேவேளை, சட்டமூலத்துக்கு ஆதரவாக, 11 இடையீட்டு மனுக்கள் அரசாங்கத் தரப்பு மற்றும் அதன் ஆதரவு தரப்புகளால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்படுள்ளன.
இந்த மனுக்கள் தலைமை நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வின் முன்பாக, கடந்த 19ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வந்தன.
நேற்று நான்காவது நாளாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, இந்த மனுக்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டமூலத்தில் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள திருத்தங்களை இன்று மன்றில் சமர்ப்பிக்க நீதியரசர்கள் குழாம், சட்டமா அதிபர் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சமர்ப்பணங்களின் பின்னர் விசாரணைக்ள ஒத்திவைக்கப்பட்டு அடுத்தவாரம் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது