சிறிலங்காவில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், ஊரடங்கு அல்லது முடக்க நிலை தொடர்பான முக்கிய அறிவிப்பை அரசாங்கம் இன்று வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மோசமாக அதிகரித்துள்ளது,
நேற்று மட்டும் 672 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அடுத்து வரும் மூன்று வாரங்களில் இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டை முடக்கினால் மாத்திரமே தொற்றாளர்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார தரப்பினர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
நாளை சனிக்கிழமை முதல் வரும் திங்கட்கிழமை வரை தொடர்ச்சியாக மூன்று விடுமுறை நாட்கள் வரவுள்ளதால், குறித்த காலத்தில் தொற்று பரவல் தீவிரமடையும் ஆபத்து உள்ளதாகவும் சுட்டிக்காடப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு முடக்க நிலையை அல்லது ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்க உயர்மட்டத்தில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இன்று பிற்பகல் இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது,