யாழ்ப்பாணம் – திருநெல்வேலி, பாரதிபுரம் பகுதி இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த 28 நாட்களாக கண்காணிப்பு வலயமாக இருந்த பாரதிபுரம் பகுதி இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ். மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர், ஆயிரத்து 155 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மாவட்ட அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது ஆயிரத்து 547 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 417 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், யாழ். மாநகர எல்லைக்குள் நான்கு பேருக்கும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஐந்து பேருக்கும் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூன்று பேருக்கும், யாழ். போதனா வைத்தியசாலையில் மூன்று பேருக்கும் கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது என்றும், மருத்துவர் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.