அவசரகால பொது சுகாதார நிலைமை ஒன்றைப் பிரகடனப்படுத்தல் தொடர்பான, தனிநபர் சட்டமூலம் ஒன்றை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சபையில் முன்வைத்துள்ளார்.
அவசரகால பொதுச் சுகாதார நிலைமை ஒன்றைப் பிரகடனப்படுத்தல்: பொதுமக்கள் சுகாதாரம் தொடர்பாக அவதானம் செலுத்துவதற்கான விசேட செயன்முறைகளை அங்கீகரித்தல் மற்றும் அதற்கு இடைநேர்விளைவான விடயங்களை வழங்குதல் என்ற தலைப்பில் இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலத்தின் 2ஆம் பிரிவின்கீழ், அவசரகால பொது சுகாதார நிலைமையொன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பமொன்றில், அவசரகால பொதுச் சுகாதார சபை எனும் நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய சபையின் தலைவராக ஜனாதிபதி செயற்பட வேண்டும் என்பதுடன், உபதலைவராக பிரதமர் செயற்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட மேலும் சில துறைகளின் அமைச்சர்கள் அதில் அங்கம் வகிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.