பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மஸ்கெலிய – பிரவுன்ஸ்விக் தோட்ட மக்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
நாளாந்தம் 20 கிலோ வரை தேயிலை பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் வற்புறுத்துவதாகத் தெரிவித்து இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
பொகவந்தலாவையிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலர் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
நாளாந்தம் பறிக்கும் கொழுந்தின் தொகையை அதிகரிக்குமாறு வற்புறுத்தும் தோட்ட நிர்வாகத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தே தாம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
பொகவந்தலாவை கெம்பியன் மேல் பிரிவு, கெம்பியன் கீழ் பிரிவு, நெல்லம்ப, ஆல்டி மேல் பிரிவு, ஆல்டி கீழ் பிரிவு மக்களே பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்தனர்.
நுவரெலியா, இராகலை, மாகுடுகல – கிளன்டவன் தோட்டத் தொழிலாளர்கள், இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, நுவரெலியா – உடபுஸலாவ பிரதான வீதியில், இராகலை – சூரியகாந்தி சந்தியில் முற்பகல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டக்காரர்கள், தமக்கான தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியதுடன், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்பையும் வெளியிட்டன.