யாழ்ப்பாண மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள், தென்னிந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணியின் அவசர கூட்டம் இன்று காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போதே இதுகுறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன், யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் அரசாங்க, சுகாதார, மருத்துவ அதிகாரிகள், படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா,
கடற்கரையை அண்டிய பகுதிகளில் மீனவர்கள், சிலர், தென்னிந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணுவதன் காரணமாக, யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைய கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
எனவே அதனை தடுப்பதற்குரிய வழிமுறை தொடர்பில் இன்றைய தினம் ஆராய்ந்திருந்தோம்.
யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களை பாதுகாப்பதற்காக தென்னிந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணுவதை தவிருங்கள் என மீனவர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாகம் குறிப்பிட்டுள்ளார்