கல்முனை தமிழ் பிதேச செயலகத்திற்கான புதிய பெயர்ப்பலகை நிறுவுதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளையும், உடன் நிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கும் இடையில் நடத்தப்பட்ட சந்திப்பின் போதே இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமிறக்கப்பட்டமை தொடர்பாக, உள்ளுராட்சி, மற்றும் மாகாண சபை அமைச்சுடன் எதிர்வரும் மே 4 ஆம் நாள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்துவது என்றும் மேற்படி சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தச்சந்திப்பு தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கருத்து வெளியிடுகையில்,
“அமைச்சர் சமல் ராஜபக்ஷவுடன் கல்முனை கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமிறக்கியமை தொடர்பாக நாம் நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தோம்.
ஒரு பிரதேச செயலகத்தினை ‘உப பிரதேச செயலம்’ என தரமிறக்குவதானது பொருத்தமற்ற செயற்பாடு என்றும் சிறிலங்கா வரலாற்றில் முதன்முதலாக தரமிறக்கப்பட்ட செயலகமாகவும் இதுவே காணப்படுகிறது என்றும் அவரிடம் சுட்டிக்காட்டினோம்.
தனிநபர் ஒருவரின் அரசியல் இருப்பிற்காக, நீதி, நியாயமற்ற முறையில் இவ்விதமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கேட்டுக்கொண்டோம்.
அவர், உடனடியாகவே அம்பாறை மாவட்ட செயலாளருடன் தொடர்பு கொண்டு, கல்முனை வடக்கு தமிழ்பிரதேச செயலகத்தினை உப பிரதேச செயலகம் என்று பெயர்ப்பலகையை அமைத்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளையும் நிறுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.” என்று குறிப்பிட்டார்.