சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கியின் பயணத்தின் போது, முப்படைகளையும் நவீன மயப்படுத்தற்கான இராணுவ உதவிகளை பெற்றுக் கொள்வது குறித்து சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று நாட்கள் பயணமாக சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கி நாளை மறுநாள் கொழும்புக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவருடன், சீனாவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றும், கொழும்பு செல்லவுள்ளது.
சீன பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான இந்தக் குழுவினர் எதிர்வரும் 29ஆம் நாள் வரை கொழும்பில் தங்கியிருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சிறிலங்கா ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு உயர்மட்டங்களுடன் அவர்கள் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
இந்தப் பேச்சுக்களின் போது, சிறிலங்கா இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றை நவீனமயப்படுத்துவதற்கான ஆயுத தளபாடங்களை பெற்றுக் கொடுப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
அத்துடன், சீனாவில் சிறிலங்கா படையினருக்கான பயிற்சி வசதிகளை அதிகரிப்பது குறித்தும் இந்தப் பேச்சுக்களின் போது முக்கியமான கலந்துரையாடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனப் பாதுகாப்பு அமைச்சரின் இந்தப் பயணத்துக்குப் பின்னர் சிறிலங்கா – சீனா இடையிலான உறவுகள் மேலும் உச்சத்துக்குச் செல்லும் என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.