நாடு முழுவதும், அடுத்த இரண்டு வாரங்களில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசாங்க நிகழ்வுகளையும் இடைநிறுத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று ஆபத்தைக் கருத்தில் கொண்டே, இரண்டு வாரங்களுக்கு அனைத்து, அரசாங்க நிகழ்வுகளையும் இடைநிறுத்துமாறு அவர் பணித்துள்ளார்.
அதேவேளை, அனைத்து தனியார் துறை நிகழ்வுகள், கூட்டங்கள், விருந்துபசாரங்களும், இரண்டு வாரங்களுக்கு, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், தற்போதைய கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி தடுப்பூசி மட்டும் தான் என்று சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
மேற்குலக நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவது போன்று, நாட்டை முடக்க நிலைக்குள் தள்ளுவது தற்போதைய நிலையில் பொருத்தமற்ற உபாயம் என்றும், அது சாதாரண மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.