தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை செல்வாவின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில், தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று காலை நினைவு நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுத் தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரெட்ணம் அடிகளார், யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன், சிவில் சமூகத்தினர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை, தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தந்தை செல்வா கலையரங்கில், நினைவுப் பேருரை இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா கலந்து கொண்டு நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.
அதேவேளை, வவுனியா மணிக்கூட்டுக் கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று காலை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம் தந்தை செல்வாவின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதன் பின்னர், நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை, மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுப் பூங்காவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். பொன்.செல்வராஜா தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சரவணபவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.