சிறிலங்காவில் சமாதான சூழலுக்கு பல்வேறு விதமான சவால்கள் இருந்தாலும், தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது என்று இலங்கை தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற ‘தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவுநாள் நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
‘முன்னேற்றத்தின் வழிகளில் இணக்கம் காணுதல்’ எனும் தலைப்பில் கலாநிதி ஜெஹான் பெரேரா நினைவுப் பேருரையாற்றியுள்ளார்.
‘இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நாம் தொடர்ச்சியாக முயற்சிக்க வேண்டியுள்ளது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஒரு அதிகாரப் பகிர்வு முறை ஏற்படுத்தப்பட்டாலும், அது முழுமை பெறாது நிலை தொடர்வதாகவும் அதன் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் முறைகளை முற்றாக அகற்றுவதற்கான ஆணையை மக்கள் தமக்கு வழங்கி இருக்கின்றார்கள் என்ற சிந்தனையோடு ஆட்சிபீடம் ஏறியுள்ளதாகவும் கலாநிதி ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌத்த மதத்தையும் இந்தத் தீவையும் பாதுகாக்கும் பொறுப்பு தம்மிடம் வழங்கப்பட்டுள்ளதாக நம்பும் சிங்கள மக்கள், சிறுபான்மை மனநிலையுடன் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் வேறு பிரதேசங்களில், வித்தியாசமாக கலாசார, மொழி பின்னணியுடன் வாழ்ந்து வரும் நிலையில் இந்த தீவில் எப்படியான நிர்வாகத்தைச் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இம்முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், 18 மாத காலத்திற்கு இலங்கை மீதான கண்காணிப்பு கடுமையாக இருக்கும் என ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா. தீர்மானத்தில் பொறுப்புக்கூறல் என்ற விடயம் உறுதியாக வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்