துறைமுகநகர சட்டமூலம் தற்போதுள்ள விதத்தில் சட்டமாக்கப்பட்டால், நிதியியல் செயற்பாட்டு செயலணி சிறிலங்காவை மீண்டும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் நிலை உருவாகலாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் திருத்தங்களைச் செய்வதன் ஊடாக தடை செய்யப்பட்ட பட்டியலில் வருவதைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா கடந்த 2011 ஆம் ஆண்டு நிதியியல் செயற்பாட்டு செயலணியின் கறுப்புப் பட்டியலில் இருந்ததாகவும், தாம் 2015 ஆம் ஆண்டு மேற்கொண்ட திருத்தங்களால் சாம்பல் நிற பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு பணச் சலவை பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள போர்ட் சிட்டி சட்டமூலம் வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் வங்கிகளும் கட்டுப்பாடுகள் இன்றி பணத்தை வைப்பிலிட அனுமதிப்பதாகவும், அது கறுப்புப் பணத்தை பணச் சலவை செய்வதை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.