காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில், 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல் அக்சா (Al-Aqsa) பள்ளிவாசலுக்கு வெளியே கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்று வந்த மோதல்களில் 300 வரையான பாலஸ்தீனர்கள் காயமடைந்ததுடன், இஸ்ரேலிய படையினர் பலரும் காயங்களுக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் இன்று ஹமாஸ் போராளிகள் வசமுள்ள காசா நிலப்பரப்பில் இருந்து இஸ்ரேல் மீது 150இற்கும் அதிகமான ஏவுகணைகள் ஏவப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஜெருசலேம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் எவருக்கும் உயிரிழப்பு ஏற்படாத போதும், இஸ்ரேல் பதிலடித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
இன்றிரவு இஸ்ரேலிய வான்படையின் விமானங்கள், காசாவில் ஹமாஸ் நிலைகள் என்று கூறப்படும் இடங்களின் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இதில், 9 குழந்தைகள், மற்றும் பெண்கள் உள்ளிட்ட 20 பேர் உயிழந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தளபதிகள் மூவர் தமது வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் முக்கியமான பிரிவு ஒன்றின் தளபதி கொல்லப்பட்டுள்ளதை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.