முக்கால்பங்கு முடக்க நிலையை அல்லது பயணத்தடையை அறிவிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்க உயர்மட்டத்தில் அவசர ஆலோசனைகள் நடத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 600 இற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் பொருளாதார மீளமைப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தலைமையில் அவசர கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அவசர சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் தலைவர்களுடன் நடந்த இந்தக் கூட்டத்தில் முழுமையான அல்லது 75 வீத முடக்க நிலையை எதிர்கொள்வதற்குத் தேவையான தயார்படுத்தல்களை முன்னெடுக்குமாறு பசில் ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், நாட்டில் ஊரடங்குச் சட்டம் இருக்காது என்றும் பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான நிலையில் அவசர சேவைகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து பசில் ராஜபக்ச சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களுடன் விரிவாக நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதேவேளை நேற்றிரவு சிறிலங்கா பிரதமரும் பயணத் தடைகளை விதிப்பது குறித்து உயர்மட்ட ஆலோசனைகளை நடத்தியதாக கூறப்படுகிறது.
இன்றிரவு இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், மாவட்டங்கள் அல்லது மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடைகளுடன் கூடிய பகுதியளவிலான முடக்கநிலை குறித்த தீர்மானம் எடுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, தேவை ஏற்படின் மாகாணங்கள் அல்லது மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.