நாட்டில் கோவிட் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே 18 ஆம் நாள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக, முள்ளிவாய்க்கால் மண்ணில் அரசியல்வாதிகளோ அல்லது பொதுமக்களோ, ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நினைவுகூரலுக்காக எவரேனும் ஒன்றுகூடினால் அரசியல்வாதிகள், பொதுமக்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் கூண்டோடு கைது செய்யப்படுவார்கள் எனவும் சிறிலங்கா இராணுவத் தளபதி எச்சரித்துள்ளார்.
இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை தாங்கள் நிராகரிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், வீடுகளில் தனித்தனியாக அதனைச் செய்வதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும், தெரிவித்துள்ளார்.