யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட மேலும் 21 பேருக்கு வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் 486 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 பேருக்கும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா மருத்துவமனையில் இருவருக்கும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நால்வருக்கும், தெல்லிப்பளை மருத்துவமனையின் மூவருக்கும், சாவகச்சேரி மருத்துவமனையில் இருவருக்கும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனை, காரைநகர் பிரதேச மருத்துவமனை, திருநெல்வேலி நோதேர்ன் தனியார் மருத்துவமனை மற்றும் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் மருத்துவமனையில் இருவருக்கும், வவுனியா பொது மருத்துவமனையில் இருவருக்கும், முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை, கொரோனா தொற்று கண்டறியப்பட்ட யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், கிளிநொச்சியில் உள்ள கிருஷ்ணபுரம் தொற்று நோயியல் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த, 88 வயதுடைய முதியவர் ஒரவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடுப்பிட்டியைச் சேர்ந்த முதியவரின் சடலம் இன்று கோம்பயன்மணல் மயானத்தில் சுகாதார அதிகாரிகளால் தகனம் செய்யப்பட்டுள்ளது.