அகில உலக யோகா சம்மேளனம் நடத்திய, யோகா போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று ‘யாழ்.யோகா உலகம்’ அமைப்பு சாதனை படைத்துள்ளது.
அகில உலக யோகா சம்மேளனம், அகில உலக யோகா வெற்றியாளர் 2021 ஆம் ஆண்டுக்கான போட்டி கடந்த மாத இறுதியில் இணைய வழியில் நடத்தியிருந்தது.
இந்தப் போட்டியில் யாழ். யோகா உலகம் அமைப்பு சார்பாக கணேசமூர்த்தி ராஜ்குமார் இரு வெவ்வேறு யோகா போட்டிகளில், போட்டியிட்டு முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்று தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.
18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் வளையுந்தன்மையுடைய ஆசனப் பிரிவிலும் (Flexibility yoga) விசேட ஆசனப் பிரிவிலுமே (Advanced yoga) இந்த சாதனையை படைத்துள்ளார்.
அமைப்பின் நிறுவுனரும் யோகா போதனாசிரியருமாகிய எஸ். உமாசுதன் போட்டியில் வெற்றியீட்டும் வகையில் சாதனையாளனுக்கு யோகா பயிற்சிகளை நுணுக்கமாக வழங்கியதோடு, நுட்பங்களும் பயிற்றுவிக்கப்பட்டன.
யோகா வகுப்புக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிரத்தியேகமான இடமொன்றில் இவருக்கென தனியான யோகா பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையில் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவை தளமாக கொண்டியங்கும் யோகா சம்மேளனத்தின் யோகா வெற்றியாளர் நிகழ்வில் இலங்கை, இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் பங்குபற்றியிருந்தன.
இதன் முடிவுகள் மே மாதம் 8 ஆம் திகதி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.