சிறிலங்காவின் இனப்படுகொலையை அங்கீகரித்து, ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து, கனேடிய அரசாங்கத்திடம் சிறிலங்கா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம், ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பாக கொண்டு வந்த, தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரம் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கண்டனத்தை நேரடியாக வெளியிட்டுள்ளார்.
இந்த தீர்மானம், கனேடிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டிற்கு முரணானது என்றும், சிறிலங்காவில் இனப்படுகொலை நடந்திருப்பதாக கனேடிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என்றும் தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார்.
இந்தச் சட்டத்தை ஒன்ராறியோ துணைநிலை ஆளுநர் மூலம், தடுத்து நிறுத்த கனேடிய அரசாங்கம் உடனடியாகத் தலையீடு செய்ய வேண்டும் என்றும், அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே, ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், நல்லிணக்க செயல்முறைகள், அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும், இருதரப்பு உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.