சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பதில், சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செல்வாக்குச் செலுத்தியதாக கூறப்படுவதை, உலக சுகாதார நிறுவனம் மறுத்துள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனோமுடன் (Tedros Adhanom) கலந்துரையாடிய பின்னரே, சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்தது என்று சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள, உலக சுகாதார நிறுவனம், சினோபாம் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கும் விடயத்தில் சிறிலங்கா ஜனாதிபதி செல்வாக்கு செலுத்தியதாக கூறப்படுவதை நிராகரித்துள்ளது.
அவசர தேவைக்கு மருந்துகளை அனுமதிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம், இரண்டு அல்லது மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்வது வழக்கம் என்றும், உற்பத்தியாளர்கள் வழங்கும் ஆய்வகத் தரவுகளைப் பொறுத்தே அனுமதிகள் அளிக்கப்படுவது வழக்கம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரங்கள் நாடுகளின் விருப்பப்படி வழங்கப்படுகின்றன தவிர, அவை உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்கு உட்பட்டவை அல்ல என்றும், உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.