சிறிலங்காவில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க சிறிலங்கா ஜனாதிபதி நேற்று மாலை இணங்கியிருந்தார்.
மே 30ஆம் நாள் வரை நடைமுறையில் இருக்கும் இந்தக் கட்டுப்பாடுகள், இன்று நள்ளிரவு தொடக்கம் அமுல்படுத்தப்படும் என்றும், ஆயினும் அத்தியாவசிய சேவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அதேவேளை தொற்று நிலை தீவிரமடைந்தால், மாவட்டங்களுக்கு இடையிலான பயணத் தடையை அமுல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை குறித்து தற்போது முடிவெடுக்கப்படாவிடினும், அவ்வாறான தடையை நிராகரிக்க முடியாது என்றும், தேவைப்பட்டால் அதற்கும் தடை விதிக்கப்படும் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.