சிறிலங்காவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நிலைமைகள் மற்றும் அதனால் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் குறித்த உண்மைத் தகவல்கள் மறைக்கப்படுவதாகவும்,செயலணி கூட்டத்தில் ஒரு சிலரின் தீர்மானத்திற்கு அமைய தரவுகள் மாற்றப்படுவதாகவும்,இவர்களின் பொய்யான தரவுகளையே ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்படுவதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேரடியாக ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளது.
நாட்டில் தற்போது கொரோனாவைரஸ் பரவல் நிலைமையானது மிகவும் பாரதூரமான நிலையில் உள்ளது. சுகாதார அதிகாரிகள், தொற்றுநோய் தடுப்பு பிரிவினர் கூறும் தொற்றாளர் எண்ணிக்கைகளை விடவும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்பதே எமது கணிப்பாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனுருத்த பாதெனிய, சுகாதார அதிகாரிகள் இதனை திட்டமிட்டு மறைக்கின்றனர் எனவும் ஒருவர் இருவரின் தீர்மானங்களுக்கு அமையவே தரவுகள் தயாரிக்கப்படுகின்றன எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் நெருக்கடி நிலைமைகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து முன்னெடுக்க வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட ஆலோசனை கூட்டமொன்று இடம்பெற்றுள்ள போதே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர்,விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனுருத்த பாதெனிய இவற்றை கூறியுள்ளார்.