சிறிலங்காவில் இன்றையதினம் 2 ஆயிரத்து530 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 23 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து சிறிலங்காவில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 060 ஆக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் மே மாதத்தின் கடந்த 10 நாட்களில், 20 ஆயிரத்து 384 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேநேரம், 149 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன.
அறிக்கைகளின் படி நாட்டில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 25 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையானவர்கள் அறிகுறியை வெளிப்படுத்திய நோயாளிகள் என்றும் அவர்களில் 17 சதவீதமானோருக்கு ஒட்சிசன் தேவைப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு ஒக்ஸிஜன் தேவைப்படுபவர்களில் சுமார் 4 சதவீதம் முதல் 5 சதவீதம் வரையானவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனிடையே ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 20 கர்ப்பிணித் தாய்மார்களும் 15 வயதுக்கு கீழ் பட்ட 25 இளம் சிறுவர்களும் சிகிச்சை பெற்று வருவதாக ஹோமாகம வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது.