சிறிலங்காவுக்கு அவசரமாக, பத்தாயிரம் ஒக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது,
நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஒக்சிஜன் சிலிண்டர்கள், ஒக்சிஜன் சீராக்கிகள் உள்ளிட்ட அவசர உயிர்காப்பு மருத்துவப் பொருட்களை வழங்கி உதவுமாறு, பிரதமர் மகிந்த ராஜபக்ச, சீனாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சீனத் தூதரகம் ஊடாக விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோளுக்கு அமைய, பத்தாயிரம் ஒக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இந்த வேண்டுகோளுக்கு சீன அரசாங்கம் உடனடியாகப் பதிலளித்துள்ளதாகவும், விரைவாக இவற்றை கொழும்புக்கு அனுப்புவதற்கு இணங்கியுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேவேளை, மேலதிகமாக தேவைப்படும் 21 ஆயிரம் ஒக்சிஜன் சிலிண்டர்களில் பத்தாயிரம் சிலிண்டர்களை வழங்க சீனா இணங்கியுள்ளது,
இதனிடையே, சீனத் தூதுவர் இன்று அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.