போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து, மே 18ம் நாளை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும், செப நாளாகவும் அனுசரிக்கும் படி, வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல், யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆகியோர் கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், “மே மாதம் 18ஆம் நாள் சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பன்னிரண்டாவது ஆண்டு நிறைவாகும்.
இறுதிப் போரின்போது கொல்லப்பட்டவர்களுக்கு இறுதிக் கிரிகைகள் கூட செய்ய முடியாது புதைத்து விட்டு தப்பிப் பிழைத்து வந்தவர்களும், அதற்கு சாட்சிகளாக இருக்கும் ஏனையவர்களும் உயிரிழந்தவர்களை கண்ணீரோடு நினைவுகூரும் நாளாகும்.
இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையுடைய நாளாகவும் அந்நாள் இருக்கின்றது.
படுகொலை செய்யப்பட்டவர்கள் அனுபவித்த வேதனைகளும் ,துன்பங்களும் விடுதலை வாழ்வுக்கு தொடர்ந்து பங்களிப்புச் செய்கின்றன.
இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய நாம், மே 18ம் நாளை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும், செப நாளாகவும் அனுசரிக்கும் படியாக வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் சிறிலங்காவில் கடந்த பல தசாப்தங்களாக நடைபெற்ற போரிலும் குழப்பங்களிலும் தமது உயிர்களை இழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து செபிக்கும்படியாகவும் கேட்டு நிற்கின்றோம்.
அனைத்துப் பங்குத் தந்தையர்களையும், துறவறக் குழுமங்களையும், மத நிறுவனங்களுக்குப் பொறுப்பானவர்களையும் பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மே 18 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு ஆலயங்களில் மூவேளை செப மணியோசை எழுப்புதல், மக்களை செபிக்க அழைத்தல், ஈகைச் சுடர் ஏற்றுதல், இரண்டு நிமிட அக வணக்கம் , இறந்தோர், பாதிக்கப்பட்டோர், துன்புறுவோரை நினைத்து மௌன செபம் செய்தல் இடம்பெறும்.
மாலை 6.15 மணிக்கு இறந்தோரை நினைவுகூர்ந்து துக்க மணி ஒலித்தல் இடம்பெறும்.
இந்த வேளையில் மக்கள் தங்கள் இல்லங்களில் இருந்தவாறு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறும், வடக்கு கிழக்கு ஆயர்கள் மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.