இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை, தணிவதற்கு ஜூலை மாதம் வரை செல்லலாம்’ என, அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிர் அறிவியல் பள்ளியின் இயக்குநர் நச்சுயிரியலாளர் ஷாஹித் ஜமீல் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் தான் இரண்டாம் அலை பரவுகிறது. உருமாறிய கொரோனா அதிக ஆபத்தானது எனக் கூற முடியாது.
கொரோனா பாதிப்பு குறைவதாக தற்போதைய வரைபடம் காட்டினாலும், முழுவதுமாகக் குறைவது அவ்வளவு எளிதல்ல.
கொரோனா முதல் அலை பாதிப்பில் நிலையான சரிவு இருந்தது. அது 90 ஆயிரம் தொடக்கம் 95 ஆயிரம் என்ற குறைவான பாதிப்பில் தொடங்கியது.
ஆனால், இரண்டாம் அலையின் உச்சம் 4 இலட்சம் எனத் தொடங்கியுள்ளது.
எனவே, இரண்டாம் அலை பாதிப்பு எதிர்பார்ப்பதைவிட மெதுவாகவே குறையும். அதற்கு ஜூலை மாதம் வரை ஆகலாம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.