எதிர்வரும் நாட்களில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாகவும், இதனை விட அதிகளவிலான தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பு உருவாகலாம் என்றும், தொற்றுநோயியல் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட வைரஸ் வகையே பரவி வருவதாகவும் குறித்த வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் ஊடாகவே இந்த வைரஸ் வந்திருக்கலாம் எனவும், இதனால் வெளிநாட்டில், இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கையை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.