முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூரும் வகையில், முள்ளிவாய்க்கால் மண்ணில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இன்று அதிகாலை சிறிலங்கா படையினரால் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அங்கு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் நடுகை செய்வதற்காக நேற்று மாலை ஆறு மணியளவில் பொது நினைவுக்கல் கொண்டு வரப்பட்டதை அடுத்து, சிறிலங்கா காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் அங்கு சென்று, நினைவுக்கல் நடுகை செய்ய தடைவிதித்திருந்தனர்.
அத்துடன் குறித்த பிரதேசம் சிறிலங்கா படையினரின் முற்றுகையின் கீழ் கொண்டு வரப்பட்டதுடன், குறித்த பகுதிக்கு எவரும் செல்ல முடியாமல் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே இரவோடு இரவாக நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதுடன், பொது நினைவுத்தூபியும் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
சுமார் 2000 கிலோவுக்கு அதிகமான எடையை கொண்ட நினைவுக்கல் கனரக வாகனம் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது.
சிறிலங்கா படையினரின் இந்த நடவடிக்கையால் முள்ளிவாய்க்காலில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும், முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்று அங்குசேதமாக்கப்பட்ட நினைவுத்தூபியை பார்வையிட்டுள்ளனர்.