கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மேலும் இரண்டு முக்கிய பிரமுகர்கள் விலகியுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில், திமுக, அதிமுக கூட்டணிக்கு மாற்றாக களமிறங்கிய நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் போனது.
இதனையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ் ஆகியோரும், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், கட்சியில் இருந்து விலகினர்.
இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலராக இருந்து வந்த சந்தோஷ்பாபுவும் இன்று கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
அரசாங்க தகவல் தொடர்புத்துறை செயலராக இருந்த சந்தோஷ்பாபு, அப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து கொண்டிருந்தார்.
அதேவேளை, கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவின் பொறுப்பாளராக இருந்து வந்த பத்மபிரியாவும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இவர் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு 33 ஆயிரத்து 401 வாக்குகளைப் பெற்று 3ம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.