இஸ்ரேல் மீது காசாவில் இருந்து இன்றும் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், காசாவில் வங்கிகள் மற்றும் புலனாய்வு மையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் 160 ஏவுகணைகள் இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் ராமொன் வானூர்தி நிலையம் மீது அயாஸ் என்ற 250 கிலோ மீற்றர் தூரத்துக்குச் சென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணையை முதல் முறையாக வீசி தாக்கியதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
தமது முக்கிய தளபதிகள் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
ரெல் அவிவ் வானூர்தி நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், ராமோன் வானூர்தி நிலையத்துக்கு வானூர்திகள் திருப்பி விடப்பட்டதை அடுத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், குறித்த வானூர்தி நிலையம் வழக்கம் போல செயற்படுவதாகவும், அங்கு ஏவுகணை தாக்குதல் நடக்கவில்லை என்றும், இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நடந்து வரும் தாக்குதல்களில் 83 பலஸ்தீனர்களும் 6 இஸ்ரேலியர்களும், கொல்லப்பட்டுள்ளதாகவும் பிந்திய தகவல்கள் கூறுகின்றன.