தனிமைப்படுத்தல் அல்லது பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுகின்ற நபர்களுக்கு ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபா வரை அபராதம் அல்லது அந்த இரண்டு தண்டனைகளும் சேர்த்து ஒன்றாக விதிக்கப்படலாம் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்துடன், நாடு முழுவதும் இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ள பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தனிமைப்படுத்தல் அல்லது பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து உடனடியாக அருகிலுள்ள காவல்துறை நிலையத்திற்கு அறிவிக்குமாறு காவல்துறை தலைமையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுபோன்ற பல புகார்கள் நாட்டில் உள்ள பல காவல்துறை நிலையங்களுக்கு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் 448 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.