தற்போது வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் பிரவேசித்துள்ள வெளிநாட்டவர்களின் சகல விதமான வீசாக்களின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மேலதிக காலப்பகுதியில் காலாவதியாகும் வீசாக்களுக்கு அந்த காலப்பகுதிக்கான கட்டணம் அறவிடப்படுவதோடு எந்தவித தண்டப்பணமும் அறவிடப்படமாட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு அமைய சுற்றுலா வீசா வைத்துள்ளவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து இணையவழியில் வீசாக்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
இந்த காலப்பகுதியில் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தீர்மானிக்குமிடத்து ஏற்புடைய வீசாக் கட்டணத்தை விமானநிலையத்தில் செலுத்தி வெளியேற முடியும்.
இதேவேளை வதிவிட வீசா வைத்திருப்பவர்கள் எதிர்வரும் ஜுலை மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் வீசாவை நீடித்து கொள்வதற்கு சேவை நாட்களில் முற்பகல் 8 முதல் பிற்பகல் 4 மணிவரையிலான காலப்பகுதியில் பத்தரமுல்லை பிரதான அவலுவலகத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தங்களுக்கான நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும்.
அத்துடன் கொரோனாபரவல் காரணமாக குறைந்த அளவு எண்ணிக்கையிலான உத்தியோகத்தர்கள் கடமைக்கு அழைக்கப்பட்டுள்ள சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவசர மற்றும் அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்காக பத்தரமுல்லை பிரதான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது