குறைந்த தொற்று ஆபத்துள்ள வெளிப்புறச் செயற்பாடுகளுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று மாநகர முதல்வர்கள் மற்றும் மருத்துவர்கள் விடுத்திருந்த கோரிக்கையை ஒன்ராறியோ அரசாங்கம் நிராகரித்துள்ளது.
கூடைப்பந்து மற்றும் ரென்னிஸ் மைதானங்கள் போன்ற தொற்று ஆபத்துக் குறைந்த விளையாட்டுகள் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கலாம் என்று இவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
எனினும், ஜூன் 2ஆம் நாள் வரை வீடுகளுக்குள் முடங்கும் உத்தரவை நீடித்துள்ள ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் வெளிப்புற விளையாட்டு மைதானங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை.
வெளிப்புற வசதிகளை மீண்டும் திறப்பதற்காக குரல் கொடுத்த பிராம்ப்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண், வெளிப்புற கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாதமை குறித்து ஏமாற்றமடைவதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மிசிசாகா முதல்வர் போன்னி குரோம்பியும், (Bonnie Crombie) பற்றிக் பிறவுணின் கருத்துடன் உடன்படுவதுடன், வெளிப்புற நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார்.