வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 58 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும், வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் மன்னாரில் இருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 18 பேருக்கும், சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 39 பேருக்கும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கும் என 58 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவர், புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சுகாதார உத்தியோகத்தர் ஒருவர், மாங்குளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மருத்துவமனையில் 3 பேர், தருமபுரம் மருத்துவமனையில் ஒருவர், கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வீதி சீரமைப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் 4 பேருக்கும், தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட மருத்துவமனையில், சுகாதார உத்தியோகத்தர்கள் இருவர், வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மன்னார் பொது மருத்துவமனையில், இருவருக்கும், கோரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 11 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நெல்லியடி சுபாஸ் வெதுப்பகத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 21 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் தையிட்டி கிராமத்தில் தடைகளை மீறி இரகசியமாக நடத்தப்பட்டிருந்த திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள் என்றும், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.