இந்தியாவில் கோவா மாநிலத்தில் ஒட்சிசன் தட்டுப்பாட்டால் மேலும் 8 கொரோனா தொற்றாளர்கள் பலியாகியுள்ளனர்.
இதனால் ஒட்சிசன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.
பனாஜியில் உள்ள கோவா மருத்துவக்கல்லூரியின் வைத்தியசாலையில் அடுத்தடுத்து இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நள்ளிரவு 2 மணி முதல் காலை 6 மணிக்குள் வைத்தியசாலையில் ஒட்சிசன் விநியோகம் தடைப்படுவதால் அவரச சிகிச்சை பிரிவில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறும் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
கடந்த 11 ஆம் திகதி 26 பேரும், 12 ஆம் திகதி 21 பேரும், 13 ஆம் திகதி 15 பேரும், 14 ஆம் திகதி 13 பேரும் கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் 5 ஆவது நாளாக 8 பேர் ஒட்சிசன் தட்டுப்பாட்டால் உயிரிழந்துள்ளனர்.
எனினும் ஒட்சிசன் விநியோகம் தாமதமடைந்ததால் கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே மறுத்திருக்கிறார்.
மேலும் ஒட்சிசன் விநியோகத்துக்கும் உயிரிழப்புகளுக்கும் எவ்வித தொடர்பு இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.