காசா நகரில் அல் ஜசீரா தொலைக்காட்சி’ ஏ.பி. செய்தி நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் செயற்பட்டு வரும், ‘ஜலா டவர்’ (Jala Tower) என்ற 11 மாடி கட்டடம், இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் தரைமட்டமாகியுள்ளது.
இன்று பிற்பகல் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
தாக்குதலுக்கு முன்னர், அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் வெளியேறுவதற்கு இஸ்ரேல் ராணுவம் ஒரு மணி நேரம் காலஅவகாசம் கொடுத்திருந்தது.
கட்டடத்தை அழிக்கவுள்ளதாகவும், உடனே அங்கிருப்பவர்களை வெளியேறும் படியும், கட்டடத்தின் உரிமையாளரிடம், இஸ்ரேலிய புலனாய்வு அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
குறித்த கட்டடத்தில் ஹமாஸ் போராளிகளும், செயற்பட்டு வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
இதனிடையே ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபை ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ளது.
ஜலா டவர் கட்டடம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது என, அல் ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
ஏ.பி. செய்தி நிறுவனமும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.