தமிழர் தாயகப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு கறுப்பு உடையுடன் செல்லவுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 18 ஆம் நாள், அனுசரிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை, நினைவு நடுகல் காணாமலாக்கப்பட்டமை ஆகியவற்றை கண்டிக்கும் முகமாகவும், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு நீதி கோரும் முகமாகவுமே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு உடை அணிந்து கொண்டு நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு உடையுடன் நாடாளுமன்றம் செல்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.