குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளை நிறைவடையாததால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியாமல் போயுள்ளதாக சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா வெளியிட்டுள்ள அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணைகளை முழுமை பெறாமல் இருப்பது குறித்து காவல்துறை மா அதிபருக்கு 130 பக்கங்களில் கடிதம் ஒன்றை சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா அனுப்பியிருந்தார்.
இதனையடுத்தே, நேற்று அவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் நிறைவடையவில்லை என்று சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்துடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எப்போதும் ஒருங்கிணைந்து செயற்பட்டு வந்துள்ளனர் என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய சட்டமா அதிபர் ஓய்வு பெற்றாலும், ஈஸடர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.