முள்ளிவாய்க்காலில்; கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக இனவழிப்புக்கான நீதியை வேண்டி நிற்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில், இனவழிப்பின் சாட்சியங்களாய் எமது ஆத்மாவை தினமும் உலுப்பிக்கொண்டிருக்கும் கொடூரமான இனவழிப்புச் சம்பவங்களை நினைந்து கறுப்புக்கொடிகளை பறக்கவிடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிநாளான 18 ஆம் திகதி பொது இடங்களிலும், இல்லங்களிலும் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுக்கு அமைவாக முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியைப் பேணியவாறு ஒவ்வொருவரும் தனித்தனியாக விளக்கேற்றியும் அஞ்சலிக்குமாறு கோருகின்றோம்.
அத்துடன் முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் அனுபவித்த பட்டினிச் சாவை நினைவு கொள்ளும் வகையில் கஞ்சியினை பரிமாறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவுகூரும் இவ் வரலாற்றுக் கடமைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு எமது மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.
ஓரிடத்தில் ஒன்று கூடி நினைவேந்துவதே எமது கூட்டுரிமையாகும். எனினும் இம்முறை கொரோனாஆபத்து நிலையில் ஓரிடத்தில் ஒன்று கூடுவதிலுள்ள ஆபத்தினை கருத்திற் கொண்டு தனித்தனியாக நினைவேந்தலை மேற்கொண்டாலும், இந்நினைவு கூரல் நிகழ்வுகள் மூலமான கூட்டுப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் முகமாக அவற்றை சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளுமாறும் அன்புரிமையுடன் வேண்டுகின்றோம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.