சிறிலங்காவுக்கு ஒரு தொகுதி அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு பிரித்தானியாவிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட சுமார் 6 இலட்சம் பேருக்கு இரண்டாவது முறை செலுத்துவதற்கு மருந்து இல்லாமல் சிறிலங்கா அரசாங்கம் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
பல்வேறு நாடுகளிடமும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு உரிய பதில் கிடைக்காத நிலையில் தற்போது, பிரித்தானியா சாதகமான பதிலை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு மில்லியன் கொவிஷீல்ட் மருந்துகளை பிரித்தானியா வழங்க முன்வந்துள்ள நிலையில் இரண்டு நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இடையில், இதுகுறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒரு தொகுதி அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுக் கொள்ள முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்ப்பதாக மற்றொரு தகவல் கூறுகிறது.
எனினும், இதுகுறித்து சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இதுகுறித்து தான் எதுவும் அறியவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.