முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டு, நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முல்லைத்தீவு காவல் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாடு மீளப் பெறப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டதுடன், அங்கு கொண்டு வரப்பட்டிருந்த நினைவுக்கல்லும் சிறிலங்கா படையினரால் காணாமல் ஆக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு சார்பாக, முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தாங்கள் அந்த முறைப்பாட்டை மீளப் பெற்றுள்ளதாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் இணைத் தலைவர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் தெரிவித்துள்ளார்.
மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த வேண்டியுள்ளது.
சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தால், அந்த பகுதிக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்படலாம் என்பதால், முறைப்பாட்டை மீளப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.