வடக்கு மாகாணத்தில் மேலும் 62 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 36 பேருக்கும், முல்லைத்தீவில் ஆறு பேருக்கும், கிளிநொச்சியில் ஆறு பேருக்கும், வவுனியாவில் 12 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 18 பேருக்கும், சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 16 பேருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருவருக்கும் என 36 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, மாவட்டச் செயலக அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 15 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 2 பேருக்கும், திருநெல்வேலி நொதேர்ன் சென்றல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், கோப்பாய் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேருக்கும், சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், முல்லைத்தீவு மருத்துவமனையில், மூவருக்கும் மல்லாவி சுகாதார அதிகாரி பிரிவில் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி சுகாதார அதிகாரி பிரிவில் இருவருக்கும் பூநகரி சுகாதார அதிகாரி பிரிவில் மூவருக்கும், தருமபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
வவுனியா சுகாதார அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கும் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் ஆறு பேருக்கும் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஐவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.